search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை"

    கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் போலி பயிற்சியாளரின் வீடு, அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.
    கோவை:

    கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் கைதான போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகம் சென்னை மாம்பாக்கத்தில் குடியிருந்த வீடு, அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அங்கு ஏராளமான போலி சான்றிதழ்களை பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ஆறுமுகத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதிகேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.அவரை காவலில் எடுத்ததும் சென்னைக்கு அழைத்து சென்று வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்த உள்ளனர்.

    ஆறுமுகத்துக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தது தொடர்பாக சிலரது பெயரை கூறி உள்ளார். இதுதொடர்பாக ஒரு தனிப்படையினர் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல ஆறுமுகம் நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள தொண்டு நிறுவனங்களில் சில காலம் வேலை பார்த்ததும், அங்கு ஏராளமான பள்ளி, கல்லூரிகளில் இதேபோன்ற ஒத்திகைகளை நடத்தியதும் தெரிய வந்தது. எனவே மற்றொரு தனிப்படையினர் நெல்லை, கன்னியாகுமரியில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஆறுமுகத்தின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர். எம்.காம். படித்துள்ள இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாததால் வேலையை இருந்து நீக்கப்பட்டார்.

    இதனால் விரக்தியடைந்த அவர் ரெயிலில் ஏறி கன்னியாகுமரி சென்றார். அங்கு தெருவோரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் ஆறுமுகத்தின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு, அவரை ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். பின்னர் அங்குள்ள பள்ளி ஒன்றில் விடுதி வார்டனாக பணியாற்றி உள்ளார்.

    பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியில் சேர்ந்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் நடத்தி உள்ளார். இந்த பள்ளியில் தான் அவர் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை கற்றுள்ளார்.

    பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய அவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று பேரிடர் ஒத்திகை பயிற்சிகளை தனியாக நடத்தி வந்துள்ளார். ஒரு சில இடங்களில் பயிற்சி நடத்த சென்ற போது போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஆறுமுகம் தான் பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சியாளர் என்ற சான்றிதழை காட்டி தப்பித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆறுமுகத்தின் கூட்டாளிகளிடம் போலீசார் விசாரித்த போது அவரை பற்றி தெரியாமல் பழிகியதாகவும், அவர் தங்களுக்கு மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியதாலேயே அவருடன் சென்றதாகவும் கூறினர்.

    ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள கல்லூரியில் பேரிடர் ஒத்திகை நடத்திய போது, பயிற்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் மீது காதல் வயப்பட்டார். தனது மாயஜால வார்த்தைகளால் மாணவியை வீழ்த்தி உள்ளார். பின்னர் அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். தற்போது அந்த மாணவி கோவையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் போலீசார் விசாரித்த போது ஆறுமுகத்தை பற்றி தெரியாமல் அவருடன் பழகி விட்டேன் என கூறி கண்ணீர் வடித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை விடுவித்தனர்.

    ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #coimbatorestudentdeath
    ×